பஸ்ஸில் கஞ்சா கடத்திய சாரதி கைது!

Spread the love

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுக்கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியில் மிகவும் சூட்சுமமான முறையில் இரண்டு கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவை எடுத்துச் சென்ற பஸ் சாரதி அநுராதபுரம் வலய போக்குவரத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் 40 வயதுடைய சிலாபம் பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அநுராதபுரம் பண்டுளகம பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வலய போக்குவரத்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பஸ் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டது.

சாரதி ஆசனத்திற்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சாவினையும் கைப்பற்றியுள்ளதுடன் பஸ் சாரதியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக வேண்டி வலய போக்குவரத்து பொலிஸார் அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு பஸ் வண்டியுடன் சந்தேக நபரை ஒப்படைத்துள்ளனர்.